மந்திரம் என்றால் என்ன ?

  • Home
  • மந்திரம் என்றால் என்ன ?
மந்திரம் என்றால் என்ன ?

மந்திரம் என்றால் என்ன ?

  •     Category: Sidhar
  •     Date: 26-04-2025

மந்திரம் என்றால் என்ன ?

 

மந்திரம் என்ற வார்த்தையை மன் + திரம் என பிரிக்கலாம். அவ்வாறு பிரித்து பார்க்கும்பொழுது மன் என்றால் மனம் என்றும் திரம் என்பது உறுதி என்றும் பொருள்படுகிறது. ஆக மனதின் திரம் என பொருளாகிறது. அதாவது ஒரு மனிதனின் மனதின் திரம் எனப்படும் மனதின் வலிமையை பொறுத்து உருவாவதே பலன் கொடுப்பதே மந்திரம் ஆகும்.இந்த வலிமையின் அடிப்படையிலேயே பலன்களும் தீர்மானிக்கப்படுகிறது.மனமானது எந்த ஒன்றை அதன் அர்த்தம் உணர்ந்து வலிமையாக ஆழ்மனதில் விதைக்கிறதோ அது அப்படியே நிஜமாகும் என்பது தான் உண்மை ஆகும். அப்படியானால் எதன் அடிப்படையில் மனதின் திரம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது.?மனம் என்பது எங்கே உள்ளது.?

 

மனம் என்பது ஐம்புலன்களின் மூலம் உருவாகும் ஒரு சூட்சும வஸ்து ஆகும்.கண்கள் பார்க்கிறது காதுகள் கேட்கிறது. மூக்கு உணர்கிறது .வாய் பேசுகிறது.மெய் உணர்கிறது. இவை அனைத்தும் தான் உணர்ந்தவற்றை எல்லாம் ஒரு இடத்தில் வைத்து உருவகப்படுத்தி சேமித்து வைக்கிறது.அந்த இடத்திற்கு பெயர் தான் மனம் ஆகும். இந்த மனம் என்பது நமது ஆறு ஆதாரங்கள் எனப்படும் சக்கரங்கள் போல அதுவும் ஒரு சக்கரமாகவே பார்க்கப்படுகிறது.அதாவது சக்தி மையமாக பார்க்கப்படுகிறது.இது ஆக்கினை எனப்படும் புருவ மத்தி பகுதியில் இருந்து சகஸ்ராரம் எனப்படும் உச்சிக்குழி வரை உள்ள ஆறு சக்கரங்களில் ஆறாவதாக உள்ள மனோ சக்கரமாகும்.இங்குதான் நாம் புலன்கள் வாயிலாக சேமிக்கும் பல விஷயங்கள் சேமிப்பது நடைபெறுகிறது.குண்டலினி சக்தியானது இந்த இடத்திற்கு வரும்போது உன்மனி எனும் நாதம் கேட்கும் என்றும் கூறப்படுகிறது.அந்த மனோ சக்கரத்தில் கேட்கப்படும் உன்மனி நாதம் தான் பின்னாளில் மனோன்மணி என அழைக்கப்பட்டது.வெறும் மனோ சக்கரமாக உள்ளவரை நாம் சாதாரணமான மனித வாழ்வை மட்டுமே வாழ முடியும்.அங்கு உன்மனி எனும் நாதம் கேட்கும்போதுதான் நம்முடைய தெய்வீக வாழ்க்கையை உணர முடியும்.மரணத்தை பிறப்பை வெல்ல முடியும்.இந்த சக்கரத்தோடுதான் நம்முடைய புலன்கள் தொடர்பில் உள்ளன. புலன்கள் செயல்படும் விதம் என்பது  ஆளுக்கு தகுந்தாற்போல் கண்டிப்பாக மாறுபட்டே இருக்கும்.ஒருவர் பார்க்கும் விதத்தைப்போல் மற்றவரின் பார்வை இருக்காது என்பது தான் உண்மையும் கூட.அவரவர் கர்மவினை அடிப்படையில் உணவு மற்றும் வாழ்வியல் கூறுகள் அடிப்படையில் அது மாறுபட்டுதான் இருக்கும்.

 

அந்த ஐம்புலன்களால் உணரப்படும் உணர்வுகளின் அடிப்படையில் செயல்படும் மனமானது அதாவது மனோ சக்கரமானது எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ ஐம்புலன்கள் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ அந்த அளவிற்கு நீங்கள் நம்பும் வார்த்தைகளுக்கும் சொல்லும் வார்த்தைகளுக்கும் வலிமை உருவாகிறது.அதனால் அதை மந்திரம் என்கிறார்கள். ஒருவனுடைய மனதின் திரத்தை பொறுத்துதான் அவனின் நம்பிக்கையான வார்த்தை எனப்படும் மந்திரம் கூட வேலை செய்யும்.அதை நாம் புரிந்து கொள்ளத்தான் எளிமையாக அதற்கு மந்திரம் என்று பெயர் வைத்தார்கள்.இதுபோக மந்திரங்கள் அதிர்வுகள் அலைவரிசை அடிப்படையில் நம் உடலில் உள்ள சில சக்தி மையங்களை தூண்டி நம் வாழ்வில் அதிசயங்கள் செய்ய வைக்கும் என்பதும் ஒரு ஆச்சரியமான உண்மையாகும்.

 

அப்படியானால் மந்திரம் என்பது ஆளுக்கு தகுந்தாற்போல் தான் வேலை செய்யுமா என்றால் அதுதான் உண்மை ஆகும். ஒரு மந்திரம் உச்சரித்தால் கிடைக்கும் பலனும் அந்த மந்திரத்தின் தன்மையும்  பொதுவானதாக இருக்கலாம்.ஆனால் அதை உச்சரிப்பவரின் மன திடத்தை மனநிலையை பொறுத்து மனோ சக்கரத்தின் தன்மையை பொறுத்து பலன்களை கொடுப்பதில் கண்டிப்பாக மாறுபடும்.ஒவ்வொருவருக்கும் ஐம்புலன்களின் செயல்பாடு என்பது ஒரேமாதிரியாக இருப்பதில்லை.அப்படியிருக்க அந்த ஐம்புலன்களினால் உருவாகும் வஸ்துவான மனதின் திறன் மட்டும் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும்.?

 

இதைத்தான் தொல்காப்பியர்

 

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரமென்ப

எனவும்

வள்ளுவர்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

 

என சொன்னார்கள்.மந்திரத்தின் வல்லமை தெரிந்தவர்கள் நிறைமொழி மாந்தர்கள் என சொல்கிறார்கள்.நிறைமொழி மாந்தர்கள் என்பவர்கள் சித்தர்கள் ஞானிகள் மேதைகள் போன்றோர் மட்டுமே.மறைமொழி என்றால் மறுக்கப்பட்ட மொழி அல்லது ரகசியம் என்பது பொருளாகிறது.அதாவது ஒரு மாபெரும் மந்திரமானது சாதாரணமான வார்த்தைப்போல் அதன் வீரியம் உணரப்படாமல் உணரமுடியாமல் மறைந்து கிடைக்கும் எனவும் அதை சரியான புரிதல் ஞானமுள்ள நபர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.அவர்கள் மட்டுமே அதன் பலனை உணரவும் முடியும்.அத்தகைய ஞானம் என்பது நமது உடலில் உள்ள தசவாயுக்களையும் நாற்சந்தியையும் சக்கரங்களையும் நன்றாக ஆரோக்கியமாக வைத்திருக்கும் நபர்களுக்கே சாத்தியப்படும் என பொருளாகிறது.

 

சித்தர்களை போன்ற மேதைகளாகிய நிறைமொழி மாந்தர்கள் நமக்காக எத்தனையோ மந்திர பொக்கிஷங்களை கொடுத்துள்ளார்.அவற்றின் சூட்சுமங்களை உணர்ந்து பலன்களை பெறுவதே நமது நோக்கமாகும்.

 

மனதிடம் என்பது மனதை பொறுத்தது.மனம் என்பது ஐம்புலன்களை பொறுத்தது.ஐம்புலன்கள் என்பது உடலில் உள்ள 72000 நாடிகளின் தன்மையை பொறுத்தது.72000 நாடிகளின் வலிமை என்பது  தசவாயுக்களின் ஆரோக்கியத்தை பொறுத்துதான் இருக்கும்.தசவாயுக்கள் என்பது உணவு மற்றும் பழக்கவழக்க முறைகளை பொறுத்தது தான் இருக்கும் . உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் ஒழுங்கு இருந்து உடல் மற்றும் தச வாயுக்கள் ஆரோக்கியமாக இருந்தாலே 72000 நாடிகளும் ஆரோக்கியமாக இயங்கும்.72000 நாடிகளும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால் போதும் புலன்கள் அனைத்தும் ஆரோக்கியமாக மாறிவிடும். புலன்கள் ஆரோக்கியமாக மாறிவிட்டால் மனம் வலிமையானதாக மாறிவிடும்.மனம் வலிமையாக மாறிவிட்டால் உச்சரிக்கும் வார்த்தைகள் மந்திரமாக மாறி வலிமையானதாக மாறி பலன் கொடுக்க தொடங்கிவிடும்.எல்லோருக்கும் புலன்களும் தசவாயுக்களும் 72000 நாடிகளும் ஒரே மாதிரியான ஆரோக்கியமாக இருக்கும் என சொல்லவே முடியாது.

 

அப்படியானால் இதற்கு என்னதான் செய்ய வேண்டும்.? மந்திரம் நீங்கள் நினைத்தபடி வேலை செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக மேற்சொன்ன ஆரோக்கிய சூத்திரம் நமக்குள் நன்றாக வேலை செய்ய வேண்டும்.உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் என்பது மிக முக்கியம் ஆகும்.அதற்கு முதல்படியாக மலஜலம் சுத்தம் செய்வது என்பது மிக முக்கியம் ஆகும்.மலஜல குற்றங்கள் இருக்கும் போது அல்லது அடக்கி வைத்திருக்கும்போது மந்திர பயிற்சிகள் மட்டுமல்ல எவ்வித பயிற்சிகளுமே பலனை அளிக்காது.தசவாயுக்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமென குறிப்பிடுவது அதனால் தான். தச வாயுக்களில் அபான வாயு என்பது தான் இதற்கு காரணமான வாயுவாகும்.இது சரியாக வேலை செய்யவில்லை என்றால் மலஜல குற்றம் ஏற்படும். மலஜல குற்றம் ஏற்பட்டால் பயிற்சி முறைகள் பலன் அளிப்பது சற்று தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் கூட போகலாம்.எனவே தசவாயுக்களை சமன்செய்யும் பயிற்சிகளை உடனே கால தாமதம் இன்றி தொடங்குங்கள்.சரியாக சொல்லவேண்டும் என்றால் அபானன் தான் நம்முடைய கர்ம கழிவுகளை அகற்றுவதில் தோஷங்கள் சாபங்கள் ஆகியவற்றை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறான்.

 

எனவே இன்று முதல் நாம் பயிற்சி முறைகளையோ அல்லது மந்திரங்களையோ குருமார்களையோ குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட நம் உடலை ஆரோக்கியப்படுத்துவதிலும் மனதை ஆரோக்கியப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால் அனைத்திலும் வெற்றி பெறலாம்.தசவாயுக்களை சமன் செய்ய நாம் ஏற்கனவே YouTube இல் பயிற்சி வீடியோ கொடுத்துள்ளோம்.YouTube இல் சென்று பார்க்க தெரியவில்லை என்றால் கீழே அதற்கான லிங்கும் கொடுத்துள்ளோம்.பயன்படுத்திக்கொள்ளவும்.

 

தசவாயுக்களை சமன்படுத்த வேண்டுமானால் முதலில் சுவாசமானது மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரை முழுவதுமாக சுற்றி வரவேண்டும் என்றால் மட்டுமே தச வாயுக்களும் சமன்படும்.அவ்வாறு சுவாசம் சீர்பட என்ன செய்ய வேண்டுமென்றால் திறந்த வெளியில் அமர்ந்து கொண்டு மூச்சை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மிக மெதுவாக நன்றாக இழுத்து பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முடிந்தவரை நிறுத்தி வைத்து பின்னர் மிக மெதுவாக வெளிய விட்டு பழக்க வேண்டும்.இவ்வாறு சுமார் 20 நிமிடங்கள் வரையிலும் தினம்தோறும் செய்ய வேண்டும். இதை ஒரு குறிப்பிட்ட காலம்வரை செய்து விட்டு பின்னர் தான் தச வாயுவை சமன்படுத்தும் முறைகளை கையாள வேண்டும்.