சர சாஸ்திரம்

  • Home
  • சர சாஸ்திரம்
சர சாஸ்திரம்

சர சாஸ்திரம்

  •     Category: Sidhar
  •     Date: 26-04-2025

சரத்தின் வகைகள்.

அதற்கு முன்பாக சரம் எனும் வார்த்தையின் முழு அர்த்தத்தை புரிந்து கொள்வது மிக அவசியமாகிறது.சரத்தின் உண்மையான பெயர் சிவசரம் என்பது தான்.அதாவது சிவசரம் என்பது தான் சரியான சரம் ஆகும்.அதாவது சிவத்திடம் தொடங்கி சிவத்திடமே முடிகிறது என்பதால் அதற்கு சிவசரம் என்று பெயர்.மேலும் சரத்தை சிவசரம் சராசரம் பராசரம் அவசரம் என நான்கு வகையாக பிரிக்க முடியும்.

சராசரம் என்றால் அசைந்து கொண்டு இருக்கும் ஒன்றை அசையாமல் நிறுத்துவதற்கு பயன்படும் சரமாகும். சரம் என்றால் இயக்கம் அல்லது அசைவு என்பது பொருளாகும்.சரா என்றால் அசையாமல் என்பது பொருளாகும்.இங்கே அசைவது என்பது நமது நெற்றிக்கண் பகுதியில் உள்ள அருட்பெரும்ஜோதியாகிய நடராஜன் எனும் ஜோதியைத்தான் குறிப்பிடுகிறார்கள்.அது அசைந்து கொண்டே இருந்தால் பிறப்பும் இறப்பும் நடந்து கொண்டே இருக்கும்.அதன் அசைவை நிறுத்தி விட்டால் பிறப்பை அறுக்கலாம்.அப்படி அதன் அசைவை நிறுத்துவதற்கு பயன்படும் அல்லது பயன்படுத்தப்படும் சரத்திற்கு சராசரம் என்று பெயர். மரணத்தை வெல்லலாம்.அதற்கு பயன்படும் சரம் சராசரம் ஆகும்.இதுவே அண்டம் எனப்படும் சிரசுப்பகுதியில் செயல்படுத்த தெரிந்து விட்டால் அந்த சரம் அண்ட சராசரம் என்று மாறிவிடுகிறது.இது வாசியோகம் குண்டலினி போன்ற உயர்வித்தைகளில் பயன்படுத்தப்படுவது ஆகும்.

பராசரம் என்றால் பரத்தின் மீது செலுத்தப்படும் சரம் ஆகும்.பரம் என்றால் மேலே என்று பொருள்.மேலே பரம்பொருள் அல்லது பரமபதம் இருக்கும் இடமாகிய சகஸ்ராரத்தில் செலுத்தப்படும் சுவாசத்திற்கு பராசரம் என்று பெயராகும்.இது நெற்றிப்பகுதியில் இருந்து மேலே சகஸ்ராரம் வரை செல்லும் சரமாகும்.

 சிவசரம் என்பது இயல்புநிலை மாறாமல் சரம் ஓடுவதை குறிக்கிறது.அதாவது இடக்கலையின் போது இடக்கலையிலும் வலது கலையின்போது வலது நாசியிலும் அக்கினி கலையின்போது நடுநாசியிலும் சரியாக ஓடுவது ஆகும். இதனால் மனிதன் தன்னுடைய வாழ்வை எவ்வித குழப்பமும் தவிப்பும் படபடப்பும் இல்லாத ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாக வாழ்வான்.

அவசரம் என்பது சரமானது தன்னுடைய இயல்பை இழந்து தவறுதலாக ஓடுவது ஆகும்.இதைத்தான் நாம் நம்முடைய வாழ்வில் அவசரப்படாதே என்றும் அவசரம் வேண்டாம் என்றும் அடிக்கடி கூறி வருகிறோம்.அதாவது அவசரம் என்றால் சரமானது தன்னுடைய இயல்பு நிலை தவறி ஓடுகிறது.அப்போது எந்த காரியம் செய்தாலும் தோல்வியில் முடியும் என்றும்  உடல் மற்றும் மனரீதியில் பாதிப்புகள் வரும் என்றும் கூறினார்கள்.மனிதனுக்கு சரமானது சிவசரமாகத்தான் ஓடவேண்டுமே தவிர அவசரமாக ஓடக்கூடாது.யோக வாழ்வில் நுழைந்துவிட்டால் பராசரம் மற்றும் சராசரம் பற்றியும் அதை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

நாம் தற்போது சிவ சரம் பற்றிய நுணுக்கங்களைத்தான் கற்றுக்கொள்ள போகிறோம்.

இப்போது சிவ சரத்தின் வகைகளை காண்போம்.

 

சிவ சரத்தின் வகைகள்

 

1 - வார சரம்

2 - திதி சரம்

3 - நட்சத்திர சரம்

4 - அயன சரம்

5 - பஞ்சபூத சரம்

 

போன்ற 5 வகையான சர வகைகள் உள்ளதாக சர சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.இனி இதைப்பற்றி தெளிவாகவும் விரிவாகவும் காண்போம்.

 

💐 வார சரம்

 

இது வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் அந்த நாள் தொடங்கும் போது  மூச்சானது எந்த கலையில் அதாவது எந்த நாசியில்  ஓடத்தொடங்க வேண்டும் என்பதை பற்றிய உண்மைகளை கூறுவதாகும்.ஒரு நாளின் தொடக்கம் என்பது அன்றைய சூரிய உதய நேரம் ஆகும்.இது இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.நமது சமய சாஸ்திரங்கள் சொல்லும் ஒருநாள் என்பது உதயம் தொடங்கி மறுநாள் உதயம் வரையிலான நேரமே ஆகும். எந்த இடமானாலும் சரி ஒரு நாளின் தொடக்கம் என்பது அன்றைய சூரிய உதயத்தில் இருந்து தான் கணக்கில் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடங்கும் நாளானது தொடங்கும் நேரத்தில் சுவாசம் எந்த நாசியில் ஓட வேண்டும் என்று சொல்வதாகும்.இது தான் சாதாரண வாழ்வில் உள்ள அதாவது இல்லறத்தில் உள்ளோர் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.வாழும் வாழ்வை வெற்றிகரமானதாக ஆரோக்கியமாக ஆனந்தமாக மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.இது சரியாக ஓடிவிட்டாலே போதுமானது எல்லாவித வெற்றிகளும் கிடைக்கும்.வேறு எதையுமே கவனிக்க வேண்டியதில்லை.

 

💐 திதி சரம்

 

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.  சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்லும் தூரமும் மீண்டும் நெருங்கி வரும்போது உள்ள தூர அளவும் திதி எனப்படுவதாம். அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி பௌர்ணமி வரையிலான பதினைந்து நாட்கள் வளர்பிறை திதி எனவும் பௌர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசை வரையிலான  பதினைந்து நாட்கள் வரை தேய்பிறை திதி எனவும் அழைக்கப்படுகிறது.ஒரு திதி என்பது ஒரு நாளின் எந்த நேரத்திலும் தொடங்கலாம்.எந்த நேரத்திலும் முடியலாம்.இதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்த திதி சரம் என்பது யோகிகள் கவனிக்கக்கூடிய ஒரு அற்புதமான சர சூத்திரம் ஆகும். யோகிகள் என்பவர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் எனும் கொள்கையை கடைபிடிப்பவர்கள்.அண்டத்தில் உள்ள மாற்றங்கள் அனைத்துமே இந்த பிண்டத்திலும் நடக்கும் என சொல்பவர்கள். ஒவ்வொரு திதியிலும் சந்திரனுடைய  ஒளி பூமியை நோக்கி வருவதை பொறுத்து யோகப்பயிற்சிகளின் பலன்கள் நிலைகள் மாறுபடுகின்றன என்பதால் அவர்கள் தேவைப்படும் திதிகளில் சரத்தை தேவைப்படும் நாசிக்கு மாற்றி யோகத்திற்கு வலு சேர்க்கின்றனர்.

மேலும் சில வாழ்வியல் சார்ந்த அதிநுட்பமான காரிய வெற்றிக்கும் இந்த திதிசரத்தை உபயோகிப்பதுண்டு.மனம் சார்ந்த முயற்சிகள் பயிற்சிகளுக்கு வலுசேர்ப்பதற்கும் இந்த திதி சரத்தை அறிந்தவர்கள் உபயோகிப்பதுண்டு.

 

💐 அயன சரம்.

 

சூரியனின் பயண திசையை கணக்கில் கொண்டு ஒரு வருடத்தை இரண்டாக பிரித்து இரண்டு அயனமாக கொண்டுள்ளனர். அயனம் என்றால் சூரியன் தன்னுடைய பயணப்பாதையை வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் செல்லும் காலத்தை கணக்கில் வைத்து ஒரு வருடத்தை இரண்டாக பிரித்து அதை அயனம் என பெயர் வைத்துள்ளனர்.அதாவது உத்திராயணம் மற்றும் தட்சிணாயனம் என இரண்டு அயனங்களாக பிரித்து அதற்கு பெயர் வைத்துள்ளனர்.சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் காலம் என்பது தை மாதம் முதல் ஆடி மாதம் வரையாகும்.இந்த பயணம் தொடங்கும் காலமான தை மாத தொடக்கத்தை உத்திராயணம் என கூறுகின்றனர்.இதுவே சூரியன் ஆடி முதல் தை வரை தெற்கு நோக்கி பயணப்படுகிறான்.இதை தட்சிணாயனம் என கூறுகின்றனர். தட்சிணாயன தொடக்கம் என்பது ஆடி மாத தொடக்கம் ஆகும். இந்த அயன சரத்தை விவசாயிகள் முதல் யோகிகள் வரை அனைவருமே கடைபிடிப்பதுண்டு.சந்திரன் என்பது எப்படி மனதோடு தொடர்பில் உள்ளதோ அதைப்போல் சூரியன் நமது உடலிலும் சரி பூமியிலும் சரி சக்திநிலையோடு தொடர்பில் உள்ளதாகும்.மண்ணின் சக்தி உடலின் சக்தி இயற்கையின் சக்தி என சக்தி நிலைகளின் மாறுபாடுகள் தேவைகள் அடைப்படையில் சரத்தை மாற்றி பயன்படுத்தி வெற்றி பெறுவதுதான் தான் இந்த அயன சரம் ஆகும்.நல்ல விளைச்சல் கிடைக்க மண்ணானது தன்னுடைய இயல்பான சக்திநிலை மாறாமல் இருப்பது அவசியம் ஆகிறது.அதே போல் யோகத்தில் வெற்றி பெறுவதற்கு உடலானது சக்தி இழக்காமல் இருப்பதும் மிக அவசியமாகிறது.அப்படி இருக்க விரும்புபவர்கள் தான் இந்த அயன சரத்தை பின்பற்றுவார்கள்.பூமியின் சக்திநிலை மாறாமல் இருப்பதற்கு இயற்கையும் சக்தி மாறாமல் இருப்பது அவசியமாகிறது.

 

💐 பஞ்சபூத சரம்

 

இது கொஞ்சம் கடினமான ஒரு முறையாகும்.இதை கற்றுக்கொள்ள கண்டிப்பாக நேரடியாகத்தான் வரவேண்டிய சூழல் வரும் .ஏனெனில் இதை மிக துல்லியமாக கணிக்க கவனிக்க வேண்டும் அப்படி என்றால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும்.இதை கவனிப்பதில் மூலம் நோய்களை கவனிக்கலாம்.கணிக்கலாம் வெல்லலாம்.அஷ்ட கர்மங்கள் செய்யலாம்.இருந்த இடத்தில இருந்தபடியே எங்கும் எவருக்கும் எதுவும் செய்ய முடியும்.இதை சுவாசமானது நாசியின் உள்ளே ஓடும்போது அதன் அழுத்தத்தின் நீளத்தின் அடிப்படையில் எந்த பூதத்திற்கான சுவாசமாக ஓடுகிறது என கணிக்கும் நுட்பமான கணிதமாகும்..அந்த அழுத்தமானது நம் உடலில் உள்ளே உள்ள பஞ்ச பூத சலனத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.நம்முடலில் பஞ்ச பூதங்கள் எப்படி இருக்கிறதோ அதையே நமது சுவாசமும் வெளியே காட்டும்.அதன் அடிப்படையில் தான் வாழ்வு மனம் உடல் சார்ந்த வெற்றியும் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது.இதை வாட்ஸாப் வழியாக சொல்ல முடியாது.குருவின் அருள் துணை நின்றால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதை தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.இந்த பஞ்சபூத சரத்தை போர் செய்வோர் விவசாயம் செய்வோர் யோகநிலையில் உயர்நிலை அடைய விரும்புவோர் பின்பற்றுவதுண்டு.

 

💐 நட்சத்திர சரம்

 

இது எந்தெந்த நட்சத்திர நாளில் எப்படி சரம் ஓடினால் நல்லது என சொல்வதாகும்.வார சரத்துடன் இதையும் இணைத்து சரியாக கவனித்தால் தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தை காரியத்தை அச்சு பிசகாமல் வெற்றி பெற வைக்க முடியும்.ஒரு நாளில் வரும் நட்சத்திரம் எப்போது தொடங்குகிறது அப்போது அல்லது நாம் தொடங்கும் காரியம் செய்யும் செயல் எந்த நட்சத்திரத்தில் அமைகிறதோ அதை அந்த நட்சத்திரம் நமக்கு சாதகமானதா இல்லையா என கவனித்து அந்த வேளையில் எப்படி சரம் ஓடினால் சிறப்பாக இருக்கும் என தெரிந்து மாற்றிக்கொள்ள முடியும்.ஒவ்வொரு  நட்சத்திரத்திற்கென பிரத்தியேக குணம் உள்ளது.அதன் தாக்கம் பூமி மீதும் நம் மீதும் ஏற்படுத்தும் சலனத்தின் அடிப்படையில் சுவாசத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என கூறுவதாகும்.இதுவும் சற்று கவனமுடனும் நீண்ட கணக்குகளுடனும் தெரிந்து கொள்ள வேண்டிய முறையாகும்.இதற்கு ஜோதிட அறிவும் கொஞ்சம் இருக்க வேண்டியது அவசியமாகிறது,

 

இத்தனை சரவகைகள் இருந்தாலும் மிகவும் எளிமையாக கையாள முடிந்த சிவசரம் எனப்படும் சரத்தை மட்டும் நாம் கவனித்தாலே மீதமுள்ள சரங்கள் தானாகவே தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். மேற்கண்ட சர சாஸ்திர வகைகளில்  நாம் நம்முடைய சொந்த ஆய்வுகளின் மூலம் சரத்தோடு சில தாந்த்ரீக நுணுக்கங்களை பயன்படுத்தி வெற்றி கண்ட சில சர சூத்திரத்தை உங்களுக்கு சொல்கிறோம்.அதை பயன்படுத்தி பாருங்கள் ஆச்சரியப்படும் வகையில் வெற்றி நிச்சயம் ஆகும்.

 

நாம் சொல்லும் சர நுணுக்கங்கள் அனைத்துமே சொந்தமாக நாம் நமது வாழ்வில் சோதனை அடிப்படையில் முயற்சி செய்து பார்த்த நுணுக்கங்கள் ஆகும்.மூச்சோடு சில தந்திரங்களை இணைக்கும்போது அது மகத்தான வெற்றிகளை கொடுக்கும் என்பதை அறிந்தோம்.அவ்வாறு வெற்றி பெற்ற நுணுக்கங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறோம்.பொதுவாக நாம் கொடுக்கும் பாடங்களை மிக மிக கவனமாக ஒருமுறைக்கு பலமுறை நிதானமாக படிக்கவும்.

நமது சபையானது ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவுகளை நாம் உணர்ந்து பின்னர் போது சபையில் கொடுக்க நினைக்கும் போது அதை மிக எளிமையாக மற்றும் இரத்தின சுருக்கமாகவே கொடுப்பது வழக்கமாகும்.மிக நீண்ட விளக்கமாக இல்லாமல் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாகவும் பயன்படுத்தும் விதமாகவும் சொல்லப்படும்.இனி நீங்கள் அதை பயன்படுத்துவதில் தான் வாழ்வின் வெற்றியே அடங்கியுள்ளது.

 

ஒரு மனிதனுக்கு சுவாசமானது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும்.அதாவது இடது நாசியில் ஒரு மணி நேரம் ஓடினால் ஒருமணி நேரம் கழித்து வலது நாசிக்கு தானாகவே மாறிவிடும்.இரண்டு நாசியிலும் ஓடிய பின் ஆறு முதல் இருபது வினாடிகள் வரை சுழுமுனையில் சுவாசம் நடக்கும்.இந்த சுழுமுனை சுவாசம் மட்டும் அவரவர் உடல் மன ஆரோக்கியத்தை பொறுத்து கால அளவு மாறுபடும். சிலருக்கு சுழுமுனை சுவாசமானது அடிக்கடி ஓடலாம்.அது அவரவர் சுவாசத்தின் ஆரோக்கியத்தை பொறுத்தது ஆகும். இடது நாசியில் ஓடுவது இடகலை அல்லது முன்கலை அல்லது சந்திரகலை  என்றும் வலது நாசியில் ஓடுவது வலக்கலை அல்லது பிங்கலை அல்லது பின்கலை அல்லது சூரிய கலை என்றும் இரண்டு நாசியிலும் ஓடினால் சுழுமுனை என்றும் சொல்வார்கள்.

 

இடைகலை என்பது பெண் தன்மை கொண்டது.ஸ்திர தன்மை கொண்டது. அமுதத்திற்கு இணையானது.கருமை நிறம் கொண்டது.எப்பொருளையும் எப்படிப்பட்ட சக்தியையும் உண்டாக்க கூடியது. பல்கி பெருக்கி தரக்கூடியது.சக்தியின் அம்சம் கொண்டது ஆகும்.குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் எப்படி மிக முக்கியமோ அதைப்போல் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த சக்தி எனும் தாயின் பாலாக வர்ணிக்கப்படும் அமுதம் உண்பது மிக முக்கியமாகும்.

 

பிங்கலை எனும் சூரிய கலை என்பது ஆண் தன்மை கொண்டது.சிவத்தின் அம்சம் ஆகும்.வெண்மை நிறம் கொண்டது.சகலத்துக்கும் ஆதாரமான சக்தியை எங்கும் எப்போதும் அளித்துக்கொண்டே இருப்பதாகும்.அதாவது உலகிற்கு எப்படி சூரியன் ஆதார சக்தியாக உள்ளதோ அதைப்போல் மனிதனுக்கும் சூரிய கலை என்பது மிக முக்கியமான சக்தியாகவே உள்ளது. எங்கும் நிறைந்துள்ள ஒன்றாகும்.அதாவது உடலெங்கும் நிறைந்துள்ள ஒன்றாகும். சரத்தன்மை கொண்டதாகும்.சரத்தன்மை என்றால் நெகிழும் தன்மை என்று இங்கே பொருளாகும். அதாவது சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மைகொண்டதாகும்.அதைத்தான் சரத்தன்மை கொண்டது என்பார்கள்.அதாவது ஒன்றை முடிவுக்கு கொண்டு வரும் சக்தி கொண்டது ஆகும்.எந்த ஒன்றிற்கு முடிவு தேவையோ அல்லது எந்த ஒன்றிற்கு அதீத சக்தி தேவைப்படுகிறதோ அதற்கெல்லாம் சூரியக்கலையே சிறந்ததாகும்.

 

சுழுமுனை எனும் அக்னிகலை என்பது அலித்தன்மை கொண்டது.ஆண் தன்மையும் இல்லாமல் பெண்தன்மையும் இல்லாமல் இரண்டு தன்மையையும் கலந்து கொண்டிருக்கும்.அதாவது இரண்டுவித சக்திகளின் தன்மை கொண்டு இருக்கும்.அதனால் தான் நடுப்புறமாக ஓடும் சக்தியின் பெயரை குண்டலினி என்று சொல்கிறார்கள்.சிவப்பு நிறத்தில் சற்று பொன்னிறம் கலந்தாற்போல் இருக்கும்.அழிக்கும் தன்மை கொண்டது ஆகும்.பாபங்கள் தோஷங்கள் சாபங்கள் பிறவி கர்மா போன்றவற்றை இல்லாமல் செய்யவோ அல்லது முற்றுப்பெற வைக்கவோ இறைவனை சென்று அடையவோ எதுவானாலும் அதற்கு சுழுமுனை சுவாசம்தான் சிறந்ததாக கருதப்படுகிறது.யோகிகள் ஞானியர்கள் இந்த சுழுமுனை சுவாசத்தை தான் மிகவும் விரும்பி அடிக்கடி நடத்துவதுண்டு